200,00,00,000 கிமீ தூரத்தில் இருந்து வந்த மண்.. வெளியாகுமா பூமி ரகசியம்.? பெரிய ஆய்வுக்கு தயாரான நாசா!
ஒசைரிஸ்-ஆர்எக்ஸ் திட்டத்தின் மூலம் எடுக்கப்பட்ட இந்த மாதிரிகள் முக்கியமானவை. ஏனெனில் பென்னு போன்ற சிறுகோள்கள் நமது சூரிய குடும்பத்தின் ஆரம்பகால வரலாற்றில் "டைம் கேப்சூலாக" இருக்க முடியும். நமது கிரகம் மற்றும் சூரிய குடும்பம் எவ்வாறு உருவானது என்பதை ஆராய்ச்சியாளர்கள் அறிய இந்த பென்னு சிறுகோள் மாதிரி உதவும்.
விண்வெளியின் முக்கியமான இடத்தில் இருந்து சிறுகோள் மாதிரிகளை சுமந்து சென்ற நாசாவின் முதல் விண்வெளி காப்ஸ்யூல் ஏழு வருட பயணத்தை முடித்துக் கொண்டு நேற்று உட்டா பாலைவனத்தில் தரையிறங்கியுள்ளது. சுமார் 200கோடி கிலோமீட்டர் தூரத்தில் உள்ள சிறுகோளில் இருந்து இந்த மாதிரியை நாசா பூமிக்கு கொண்டு வந்துள்ளது.
பூமியில் இருந்து, ஒசைரிஸ்-ரெக்ஸ் விண்கலம் 63,000 மைல்கள் அதாவது 100,000 கிலோமீட்டர் தொலைவில் இருந்து காப்ஸ்யூலை வெளியிட்டது. அந்தக் காப்ஸ்யூல் சுமார் நான்கு மணி நேரம் கழித்து, பாராசூட் வழியாக அமெரிக்க ராணுவத்திற்கு சொந்தமான உட்டா பாலைவனத்தில் இருக்கும் பயிற்சி மையத்தில் தரையிறங்கியது.
அந்தக் காப்ஸ்யூலில் பென்னு எனப்படும் கார்பன் நிறைந்த சிறுகோளில் இருந்து எடுக்கப்பட்ட முக்கியமான மாதிரிகள் இருக்கும் என விஞ்ஞானிகள் எதிர்பார்க்கிறார்கள். இருப்பினும், கொள்கலனைத் திறக்கும் வரை, அதில் என்ன இருக்கும் என்பது பற்றி உறுதியாக எதுவும் கூற முடியாது. இதற்கு முன்னதாக சிறுகோள் மாதிரிகளை பூமிக்கு கொண்டு வந்த ஒரே நாடு ஜப்பான். ஆனால் ஜப்பானால் சிறுகோளில் இருந்து ஒரு டீஸ்பூன் அளவு மட்டுமே மாதிரிகளை சேகரித்து கொண்டு வர முடிந்தது. ஆனால் தற்போது அமெரிக்க விண்கலம் அதிகப்படியான மாதிரிகளை சேகரித்து இருக்கும் என்று நம்பப்படுகிறது.
கடந்த 2020 ஆம் ஆண்டு பூமிக்கு அருகில் சுற்றி வரும் பென்னு என்னும் சிறு கோளின் மேற்பரப்பில் இருந்து மாதிரிகளை எடுக்கத் தொடங்கியது நாசா, எடுக்கப்பட்ட அந்த மாதிரிகள் தான் தற்போது கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த சிறுகோள் மாதிரிகள் பற்றிய ஆய்வு, 4.5 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு நமது சூரிய குடும்பத்தின் தொடக்கத்தில் பூமியும் அதன் தோற்றமும் எவ்வாறு உருவானது என்பதை விஞ்ஞானிகள் நன்கு புரிந்துகொள்ள உதவும் என நம்பப்படுகிறது. ஒசைரிஸ்-ரெக்ஸ் விண்கலம் 2016 இல் தனது பணியைத் தொடங்கியது. அந்த விண்கலம் பென்னு என்ற சிறுகோளை அணுகி 2020 இல் இருந்து மாதிரிகளை சேகரிக்கத் தொடங்கியது.
இந்த மாதிரிகள் ஹூஸ்டனில் உள்ள நாசாவின் ஜான்சன் விண்வெளி மையத்திற்கு கொண்டு செல்லப்படுகிறது.
NASA கேப்சியூல்
ஒசைரிஸ்-ஆர்எக்ஸ் திட்டத்தின் மூலம் எடுக்கப்பட்ட இந்த மாதிரிகள் மிகவும் முக்கியமானவை. ஏனெனில் பென்னு போன்ற சிறுகோள்கள் நமது சூரிய குடும்பத்தின் ஆரம்பகால வரலாற்றில் "டைம் கேப்சூலாக" இருக்க முடியும். நமது கிரகம் மற்றும் சூரிய குடும்பம் எவ்வாறு உருவானது என்பதை ஆராய்ச்சியாளர்கள் அறிய இந்த பென்னு சிறுகோள் மாதிரி உதவும்.
Comments
Post a Comment